இந்தியாவில் நொய்டாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஹெச்.சி.எல் நிறுவனத்தின் புதிய தலைவராக ரோஷினி நாடார் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த சிவநாடாருக்கு சொந்தமான ஹிந்துஸ்தான் டெக்னாலஜிஸ் நிறுவனம் இந்தியாவின் நான்காவது மிகப் பெரிய ஐ.டி நிறுவனமாகும்.

இந்த நிறுவனத்தில் 1,50,287 ஊழியர்கள் பணி புரிகிறார்கள். கிட்டத்தட்ட ஒரு லட்சம் கோடி சொத்து மதிப்பு கொண்ட ஹெச்.சி.எல் நிறுவனத்தின் தலைவராக சிவநாடார் இருந்து வந்தார்.

இந்நிலையில், சிவநாடாரின் மகள் ரோஷினி நாடார் மல்கோத்ரா இன்று ஹெச்.சி.எல்லின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

சிவநாடார் மேலாண் இயக்குநர் மற்றும் தலைமை வியூக வடிவமைப்பாளர் என்ற புதிய பொறுப்புடன் ஹெச்.சி.எல் நிறுவனத்தில் செயல்படுவார்.

ரோஷினி, இதுநாள் வரை, நாடார் ஹெச்.சி.எல் கார்ப்பரேசன் நிறுவனத்தின் எக்ஸிகியூடிவ் டைரக்டர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் ஹெச். சி.எல் டெக்னாலஜிநிறுவனத்தின் துணைத் தலைவராகவும் இருந்து வந்தார்.

இவரின் மொத்த சொத்து மதிப்பு தற்போது 36,800 கோடி ரூபாய், இவர் தான் இந்தியாவில் டாப் 10 செல்வந்தர் பெண்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

கடந்த 2017, 2018, 2019 ஆண்டுகளில் தொடர்ச்சியாக போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட 100 செல்வாக்குமிக்க பெண்கள் பட்டியலில் ரோஷினி இடம் பெற்றிருந்தார்.

டெல்லியில் பிறந்த ரோஷினி, அமெரிக்காவின் Kellogg School of Management, பல்கலையில் எம்.பி .ஏ பட்டம் பெற்றவர்.

தற்போது, 38 வயதாகும் ரோஷினிக்கு ஷிக்தர் மல்கோத்ரா என்ற கணவரும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.