என் வயது 25. இன்னும் திருமணமாகவில்லை. பிறந்தது முதல் நான் ஒருகிட்னியுடன்தான் வாழ்கிறேன். ஒரு கிட்னியுடன் உள்ள நான் கல்யாணம் பண்ணலாமா?

என் வயது 25. இன்னும் திருமணமாகவில்லை. பிறந்தது முதல் நான் ஒரு கிட்னியுடன் தான் வாழ்கிறேன். அதனால் மாதவிலக்குப் பிரச்சினைகள், கை, கால் வீக்கம், வெள்ளைப்படுதல் போன்றவை ஏற்படுகின்றன.

ஒரு கிட்னியுடன் உள்ள நான் கல்யாணம் பண்ணலாமா? உடலுறவிலோ, கர்ப்பம் தரிப்பதிலோ பாதிப்பிருக்குமா? பிறக்கப்போகும் குழந்தையும் ஒருகிட்னியுடன் பிறக்க வாய்ப்புண்டா? – எஸ்.பிரியா, திருச்சி.

நீங்கள் திருமணம்செய்து கொள்ளக் கூடாது என்றில்லை. உங்களை ஏற்றுக் கொள்ளும் நல்ல கணவர் கிடைத்தால் தாராளமாகச் செய்து கொள்ளலாம். ஒரு கிட்னியுடன் இருந்தாலும், ஆரோக்கியமாக இருக்கிறீர்களா என்பது தான் முக்கியம்.

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் மற்ற பிரச்சினைகளுக்கு சரியான சிகிச்சைகளின் மூலம் தீர்வு காணலாம். ஒரு கிட்னியுடன் இருப்பதால் உங்கள் தாம்பத்திய வாழ்க்கையிலோ, கர்ப்பம் தரிப்பதிலோ பாதிப்பிருக்காது. ஆனால் உங்களுக்குப் பிறக்கும் குழந்தையும் ஒரு கிட்னியுடன் பிறக்க ஐம்பது சதவிகிதம் வாய்ப்புகள் உண்டு.

என் வயது 18. பூப்பெய்தி நான்கு வருடங்கள் ஆகிறது. என் மார்பகங்களில் காம்புகள் உள்ளே இழுத்த படி உள்ளன. நாளுக்கு நாள் மார்பகங்கள் சிறுத்துக் கொண்டேபோகிறது. தீர்வு சொல்வீர்களா? -சுகன்யா, கோவை.

இது இன்வர்ட்டட் நிப்பிள்ஸ் எனச் சொல்லக் கூடிய பிரச்சினையாக இருக்கலாம். அப்படியிருப்பின் நீங்கள் கல்யாணமாகி, கர்ப்பம் தரிக்கும் போது மார்பகங்கள் பெரிதாகிற சமயத்தில் இந்தப் பிரச்சனை தானாகச் சரியாகும். மற்றபடி மார்பகங்களில் ஏதேனும் வீக்கம் இருக்கின்றனவா எனப் பாருங்கள்.

கட்டிகள் ஏதேனும் இருக்கின்றனவா எனத் தெரிய வேண்டும். நல்ல மகப்பேறு மருத்துவரை நேரில் கலந்தாலோசியுங்கள். வலி இருந்தாலும் உடனடி மருத்துவப் பரிசோதனை அவசியம். பிரசவத்துக்குப்பிறகு, குழந்தை தாய்ப்பால் குடிக்கிறபோது சரியாகும். கவலை வேண்டாம்.