இந்த உலகிலேயே எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் நம் மீது பாசம் வைப்பவர்கள் நம் பெற்றோர்கள் மட்டும்தான்! அப்படி பாசம் வைத்த ஒரு அம்மாவின் கதைதான் இது!

ஆந்திர மாநிலத்தின் ஒரு பகுதியில் தன் தாய் ரெஞ்சியோடு வாழ்ந்து வந்தான் சிறுவன் தர்ஷன். இவனது தந்தை ஜான் ஆண்டனி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு விபத்தில் உயிர் இழந்தார். அதில் இருந்தே ரெஞ்சி தன் வாழ்நாளை தர்ஷனுக்காகவே வாழ்ந்து வந்தார்.

மூன்று வயதான தர்ஷனை அண்மையில் எல்.கே.ஜியில் கொண்டு சேர்ந்த ரெஞ்சி, தினமும் அவனை பள்ளிக்கு தன் ஸ்கூட்டியில் கூட்டிப்போய், கூட்டி வருவதை வழக்கமாக வைத்திருந்தார். வழக்கம் போல் அன்று மாலை தர்ஷனை பள்ளியில் இருந்து ஸ்கூட்டியில் கூட்டி வந்தார் ரெஞ்சி.

அப்போது எதிரே வாகனம் ஒன்று வர, சைட் எடுத்தார் ரெஞ்சி. அப்போது அந்த சாலையும் குண்டு, குழிகளாக இருக்க அதில் கட்டுப்பாட்டை இழந்து ரெஞ்சியின் பைக் கீழே விழுந்தது. இதில் ரெஞ்சி காயம் அடைந்தார். தர்ஷனுக்கோ தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

அவனை அவசர, அவசரமாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனார்கள். ஆனால் சிறுவன் தர்ஷன் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தர்ஷனுக்கு இறுதிச்சடங்கு செய்த இடத்தில், அவனது கல்லறையில் போய் படுத்துக்கொண்ட ரெஞ்சி, ‘’அம்மா இங்க தாண்டா இருக்கேன். இங்க தான் இருப்பேன்..”என அழுதுகொண்டே இருந்தார்.

அவர் அங்கேயே இருப்பதை தெரிந்து அவரது குடும்பத்தினர் வந்து கூட்டிச் சென்றனர். ஆனாலும் அவர் வீட்டில் இருந்து மீண்டும், மீண்டும் போய் கல்லறையிலேயே படுத்து அழுகிறார். இந்த சம்பவம் அந்தபகுதியில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளார். ஏற்கனவே விபத்தில் கணவனை இழந்த ரெஞ்சிக்கு, மகன் மட்டுமே ஆறுதலாகவும், நம்பிக்கையாகவும் தெரிந்தார். இப்போது மகனும் இறந்த நிலையில் ரெஞ்சிக்கு இறைவன் அதை தாங்குவதற்கான மனவலிமையை கொடுக்கட்டும்!