தலைமுடி எலி வால் போல அசிங்கமா இருக்கின்றதா...உங்கள் தலைமுடி நன்கு வளர உங்களுக்குத் தெரியாத புது சர்ப்ரைஸ் டிப்ஸ் உள்ளே...!!

பெண்கள் எப்போதும் தங்களுடைய தலைமுடி நீளமாகவும், அடர்த்தியாகவும் இருப்பதையே விரும்புவார்கள். தலைமுடி வலிமையாகவும், அழகாகவும், அடர்த்தியாகவும் இருப்பது ஒருவரின் அழகை மேம்படுத்திக் காட்டும்.

எனவே தலைமுடியை நீளமாகவும், அடர்த்தியாகவும் வைத்துக் கொள்வதற்கும், கூந்தலின் வேர்களை வலிமையாக வைத்துக் கொள்வதற்கும் நமது முன்னோர்கள் தலைக்கு எண்ணெய் தடவி வரும் வழிமுறையை பின்பற்றி வந்தனர்.

கூந்தல் தொடர்பான பல பிரச்சனைகள் தீர மூலிகை எண்ணெய் தடவுவது ஒரு சிறப்பான சிகிச்சையாகும். அதை எப்படி தயார் செய்வது என்பதை இங்கே பார்க்கலாம்.

வீட்டில் பிரிங்கராஜ் எண்ணெய் தயாரிப்பது எப்படி?

பிரிங்கராஜ் எண்ணெயை தயாரிக்க, முதலில் தேவையான அளவு பிரிங்க்ராஜ் இலைகளின் (கரிசலாங்கண்ணி) சாற்றைப் பிழிந்தெடுக்கவும்.

சாறு எந்த அளவு உள்ளதோ அதே அளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கவும்.

ப்ரிங்கராஜ் சாறு மற்றும் எண்ணெய்யை ஒன்றாக கலந்து குறைந்த வெப்பத்தில் அடுப்பில் வைக்கவும்.

சாறு முழுவதுமாக எண்ணெயில் கலந்து விடும். எண்ணெய் மட்டுமே மீதம் இருக்கும். இந்த நிலையில், அடுப்பை அணைத்து விடவும்.

முடி உதிர்தல் பிரச்சினையால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால், இந்த சாறு மற்றும் எண்ணெய்யை அடுப்பில் வைப்பதற்கு முன், அதில் அதே அளவு நெல்லிக்காய்ச் சாறு சேர்க்கவும்.

பிரிங்கராஜ் எண்ணெய் தலைக்கு பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்

பிரிங்கராஜ் எண்ணெயைக் கொண்டு தலைமுடியை அடிக்கடி மசாஜ் செய்வதை வழக்கமாக்கிக் கொள்வதால், உச்சந்தலையில் தொற்று பாதிப்பு ஏதும் உண்டாகாமல் தடுக்கலாம். இவ்வாறு செய்வதனால் பொடுகு பாதிப்பு நீங்குகிறது.

 

தொடர்ந்து தலைமுடிக்கு இந்த எண்ணெய்யை பயன்படுத்தி வருவதால் தலைமுடி நரைக்காமல் இருப்பதுடன் கூந்தலின் இயற்கை குளிர்ச்சி தக்க வைக்கப்படுகிறது.

பிரிங்கராஜ் எண்ணெய் ஒரு இயற்கையாக தயாரிக்கப்படும் எண்ணெய் என்பதால் எந்த ஒரு பக்க விளைவும் ஏற்படுவதில்லை.

ஆனால் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த எண்ணெய் மிகவும் குளிர்ச்சியானது. இதனால் குளிர்காலத்தில் இரவு நேரத்தில் தலைக்கு இந்த எண்ணெய்யைத் தடவி விட்டு தூங்குவதைத் தவிர்க்க வேண்டும். தலைமுடி இழப்பு தொடர்பான பிரச்சனைகளுக்கு பிரிங்கராஜ் எண்ணெய் ஒரு சிறந்த தீர்வைத் தருகிறது.

இந்த எண்ணெயைக் கொண்டு தலைமுடிக்கு நன்கு மசாஜ் செய்வதனால் கூந்தல் வேர்கள் வலிமையடைந்து முடி வளர்ச்சி இல்லாத இடங்களில் மீண்டும் முடி வளர தொடங்குகிறது.

குறிப்பாக இந்த பலனைப் பெறுவதற்கு தலையில் முடி இல்லாத பகுதிகளில் இந்த எண்ணெய்யைத் தடவி மென்மையாக கைகளால் தொடர்ந்து சில நிமிடங்கள் மசாஜ் செய்து, அடுத்த சில மணிநேரம் ஊறவிடவும்.

பிறகு மென்மையான ஷாம்பு கொண்டு தலையை நன்கு அலசவும். தலையை அலசும் போது ஷாம்பு பயன்படுத்துவதை விட சீயக்காய் தூள் அல்லது அரப்பு கொண்டு அலசுவது இன்னும் சிறந்த பலனைத் தரும்.

இது தவிர, உங்கள் தலைமுடியை தூசி, அழுக்கு மற்றும் மாசுபாட்டிலிருந்து பாதுகாக்க வெளியே செல்லும் போது, கூந்தலை நன்றாக முடிந்து கொண்டு செல்ல வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தலை முடியை விரித்து போடுவதை தவிர்க்கவும்.