வரலட்சுமி சரத்குமார் ஹீரோயினாக நடித்திருக்கும் ஹீரோயின் சென்ட்ரிக் படம் “டேனி”. இப்படத்தை சந்தானமூர்த்தி இயக்கியுள்ளார். தஞ்சாவூருக்கு அருகே ஒரு கிராமத்தில் இருக்கும் காவல் நிலையத்தை மையப்படுத்தி இப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.
அந்த காவல் நிலையத்தின் மையத்துக்குள் நடக்கும் ஒரு கொலையைத் துப்பறியும் காவல்துறை அதிகாரியாக வரலட்சுமி நடித்துள்ளார். அவருடன் பிங்கி என்ற ஒரு நாய் நடித்திருக்கிறது. படத்தில் அதன் பெயர் தான் டேனி.
உடனிருக்கும் மனிதர்களை நம்பாமல், வரலட்சுமி – டேனி இணைந்து எப்படி அந்தக் கொலையை துப்பு துலக்கினார்கள் என்பதே ‘டேனி’ படத்தின் மீதி கதை. இந்தப் படத்தைப் பற்றி வரலட்சுமி சரத்குமார் சுவாரஸ்யமான் விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
அவர் கூறுகையில், டேனி என்கிற நாய் தான் படத்தின் ஹீரோ. இதில் இன்ஸ்பெக்டராக நான் நடித்துள்ளேன். நான் எந்தக் கதாபாத்திரத்துக்கும் யாரிடமும் கற்றுக் கொள்வதில்லை. இந்தப் படத்தில் காவல்துறை உடையணிந்தவுடன், இயக்குநர் என்ன சொல்கிறாரோ அதற்கு ஏற்றார் போல் நடித்துள்ளேன்.
நாய்க்குட்டியுடன் நடித்தது இந்த படத்தில் எனக்கு பிடித்த விஷயம். கதை ரொம்ப அழகாக இருந்தது. ஒரு கொலை நடக்கிறது, அதை எப்படி ஒவ்வொரு கட்டமாக தாண்டி கண்டுபிடிக்கிறார்கள் என்ற கதை.
தேவையில்லாமல் எந்தவொரு காட்சியுமே இருக்காது. படப்பிடிப்பு தளத்தில் நாயைப் பார்த்தவுடன் முதலில் போய் கட்டிப்பிடித்துவிட்டேன். இந்தப் படத்தின் படப்பிடிப்புக்குப் போனதிலிருந்து டேனி எப்போது வருகிறது என்று தான் கேட்டுக் கொண்டே இருந்தேன்.
தன்னுடைய காட்சிகளுக்குப் பிறகு அழகாக போய் அதன் இருக்கையில் அமர்ந்து கொள்ளும். நமக்கு இது கேமரா, படப்பிடிப்பு என்றெல்லாம் புரியும். ஆனால், டேனியே பல டேக்குகள் வாங்காமல் ட்ரெய்னர் என்ன சொல்றாரோ அதை அப்படியே சரியாக நடித்தது ஆச்சரியமாக இருந்தது. என கூறியுள்ளார் வரலக்ஷ்மி.