இந்தத் தாவரத்தின் அறிவியல் பெயர் Abrus precatorius. உலகெங்கும் உள்ள வெப்ப மண்டல காடுகளில் இது காட்டுச் செடியாக வளர்ந்து நிற்கிறது. 10 அடி உயரம் வரை வளரும் இந்தச் சிறிய செடியில் அவரை போல காய் காய்க்கும். அதற்குள் இருந்து வெளிவரும் விதைதான் குன்றிமணி.
நம் ஊரில் காலம் காலமாக அளக்க குன்றி மணிதான் எடைக்கல். ஒரு குன்றி மணிக்கு இணையான அளவு கொண்ட தங்கமே குண்டுமணி தங்கம் என பேச்சு வழக்கில் அழைக்கப்பட்டது.
என்னதான் பட்டாணியோடு இதனை இணைத்துப் பேசினாலும் இதை சுண்டல் போல வேக வைத்து தின்ன முடியாது. காரணம் மிக மிக கொடிய விஷத்தன்மை கொண்ட தாவரம் இது. ஒரு மனிதனைக் கொல்ல ஒரே ஒரு குன்றி மணி போதுமானது என்கிறார்கள். உலகம் முழுவதும் தாவரத்தில் இருந்து பெறப்படும் விஷத்தில் மூன்றாவது இடம் இந்த குன்றி மணிக்குத்தான்.
குன்றிமணியின் வேர் நமது சித்த மருத்துவத்திலும் கூட மருந்தாகப் பயன்படுகிறது. இதன் இலைகளில் டீ போட்டுக் குடிக்கும் பழக்கம் உலகம் முழுவதும் இருந்திருக்கிறது.