பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணிம் (வயது 74) தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட 16 மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

கடந்த 5ந்தேதி அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து தான் முழு உடல் நலத்துடன் இருப்பதாக அவரே வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

இந்த நிலையில், கடந்த 13ந்தேதி எஸ்.பி.பி. உடல்நிலை கலைக்கிடமாக உள்ளது என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இது ரசிகர்கள் மத்தியிலும், திரை உலகினர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எஸ்.பி.பி.யின் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டு, அவருக்கு செயற்கை சுவாசம் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நோயாளிகளுக்கு அளிக்கப்படும் எக்மோ கருவி மூலம் தொடர் சிகிச்சை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம், படுக்கையில் இருந்தபடி கையை உயர்த்தி காட்டும் புகைப்படம் இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

அவர் உடல்நலம் பெற்று திரும்பி வரவேண்டும் என திரையுலகினர் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இதுபற்றி நடிகர் விவேக் வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியர் அனைவராலும் நம் தேசம் நேசிக்கப்படுவது போல இன்னொருவரும் நேசிக்கப்படுகிறார்.

அவர் நம்முடைய எஸ்.பி.பி. அவர்கள். இந்தியாவின் பல மொழிகளிலும் இனிமையான பாடல்களை அவர் கொடுத்துள்ளார். உடல்நலம் குன்றி தீவிர கண்காணிப்பில் அவர் இருக்கிறார். அவருக்காக இந்த தேசமே இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறது.

பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடிய அவர் சீக்கிரம் நலம் பெற்று மீண்டும் வரவேண்டும். அதற்காக இந்த தேசம் பிரார்த்தனை செய்வது போன்று நாமும் செய்வோம். அவர் பூரண உடல்நலத்துடன் திரும்பி வரவேண்டும். அவருக்காக நான் இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன் என கூறியுள்ளார்.

இதேபோன்று தமிழ் திரைப்பட இயக்குனர் சந்திரசேகர் வெளியிட்டுள்ள செய்தியில், இசைக்கு என்றுமே முடிவு கிடையாது. இசை கலைஞனான அவர் நிச்சயம் மீண்டு வருவார். மீண்டு வந்து பாடுவார். மேடையில் எஸ்.பி.பி. மீண்டும் பாட, அதனை நான் பார்க்க வேண்டும்.

அவர் மீண்டுவர பிரார்த்தனை செய்து கொள்கிறேன் என கூறியுள்ளார். தற்போது எஸ்.பி.பி அவர்கள் கடந்த இரண்டு நாட்களாக மயக்க நிலையில் தான் இருந்துள்ளார். இன்று காலை அவர் மயக்க நிலையிலிருந்து மீண்டுள்ளதாக அறிவித்துள்ளனர். இவை ரசிகர்களுக்கு செம்ம சந்தோஷத்தை அளித்துள்ளது.