முட்டை ஓட்டை பொடி செய்வது இவ்வளவு பெரிய பிசினஸ்சா? இவ்வளவு நாட்கள் தூக்கி குப்பையில் எறிந்து விட்டோமே!

முட்டை ஓட்டை பொடி செய்து, ஏற்றுமதி செய்யலாம் என்று நண்பர் சொல்ல, எனக்கு விளையாட்டாக தெரிந்தது. “என்னடா சொல்றா? அதைய பொடி பண்ணி எங்க கொண்டுபோய் விற்கப்போறோம்?” என்று கேட்க, “மச்சி கிரவுண்ட் வொர்க் செஞ்சு பண்ணா நல்லா இலாபம் இருக்கு” என்றான். ஈரோட்டில் இருக்கும், பிரபலமான நிறுவனம் கூட, இதனை மிகப்பெரிய அளவில் செய்வதாக சொன்னான். அதன் பிறகே, இப்படியும் வித்தியாசமான தொழில்கள் இருக்கிறதா என்பதே எனக்கு தெரிந்தது.

இதுவே ஒரு ஆச்சர்யம் என்றால், முட்டையின் வெள்ளைக்கருவை பொடியாகவும், மஞ்சள் கருவை தனியே பொடியாகவும் மாற்றி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதும், நம்ம ஊரிலேயே நடக்கிறது. முட்டை ஓட்டில் கால்சியம் மிகுந்து இருப்பதால், பயிர்களுக்கு உரமாக போட பயன்படுத்தப்படுகிறது. இது தவிர, மதிப்புகூட்டப்பட்டு, வேறு சில மருத்துவ காரணங்களுக்காகவும், உபயோகப்படுத்தப்படுகிறது. சில நாடுகளில் பாஸ்ட்புட் தயாரிப்புகளில் சேர்க்கப்படுகிறது.

 

முட்டை ஓட்டு பவுடர், அழகு பராமரிப்பு துறையிலும், முக்கிய பங்கு வகிக்கிறது. விளையாட்டு வீரர்களுக்கு புரதச்சத்து அதிகமான உணவை பரிந்துரை செய்வார்கள். அதிலும் முட்டை ஓட்டு பவுடர் பயன்படுத்தப்படுகிறது. பல் சொத்தை, பல் சிதைவு போன்ற சிகிச்சைகளின் போது, சொத்தையால் உருவான சிதைவுகளை அடைப்பதில் பயன்படுத்தப்படுகிறது. ஷாம்பு தயாரிப்பு கம்பெனிகளும் முட்டை பவுடரை பயன்படுத்துவதாக கேள்விப்பட்டிருக்கிறேன்.

ஆர்டர் பிடிப்பதில் தொடங்கி, சரியான சப்ளையரை தேர்வு செய்வதில் மட்டுமே இத்தொழிலின் வெற்றி சூட்சமம் அடங்கியிருக்கிறது. அமெரிக்கா, கனடா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் இதற்கு அதிக டிமாண்ட் உண்டு. சாதாரண ஒரு டேபிளையே, மேல் வீட்டில் இருக்கு, கீழ் வீட்டில் இருக்கு, உங்க வீட்டில் இல்லையா என்று சொல்லி விற்பனை செய்யும் போது, சரியான திட்டம் போட்டு செயல்பட்டால், எந்த தொழிலும் வெற்றி சாத்தியமே.