இன்றையை கோலிவுட் சினிமாவில் மோஸ்ட் வான்டட் இயக்குனர் வெற்றிமாறன். தனுஷுடன் மட்டுமே இணைந்து பல படங்கள் ஹிட் கொடுத்தவர். தற்பொழுது சூரி, சூர்யா, தனுஷ் என இவரது அடுத்தடுத்த படங்களின் லிஸ்ட் உள்ளது. ஏற்கனவே லாக்கப், வெக்கை என்று நாவல்களை விசாரணை, அசுரன் என படமாக்கியுள்ளார். அடுத்ததாக அஜ்நபி, வாடிவாசல் போன்ற நாவல்களை படமாக்கும் முயற்சியில் உள்ளார்.
1959 இல் மதுரைக்காரரான சி சு செல்லப்பா எழுதிய குறுநாவல் வாடிவாசல். மண், மனிதர்கள் பற்றிய கதை. நம் மண்ணின் வீரம், பாரம்பரியம், ஜாதிய சிந்தனை போன்றவற்றை சல்லிக்கட்டின் பின்னணியில், வீரம் ததும்ப ததும்ப எழுதப்பட்ட 70 பக்க நாவலே வாடிவாசல். ஒரு மாலை நேரத்தில் நடக்கும் கதைக்களம்.
பெரியப்பட்டி ஜமீனில் நடக்கும் செல்லாயி ஜல்லிக்கட்டு, இதில் பங்கேற்க வரும் பல 100 நபர்களில் இருவர் தான் மாமன் – மச்சான் ஆன பிச்சி (சூர்யா) மற்றும் மருதன். ஒருபுறம் திருவிழாக்கோலம், மறுபுறம் காளை மாடுகளின் அணிவகுப்பு என நகர்கிறது.
அங்கு பாட்டையா என்ற பெரியவர் மாடு தழுவும் யுக்தி, வெவ்வேறு விதமான காளைகளை பற்றி விவரிக்கிறார். மேலும் சிறந்த வீரன் ஒருவன் இருந்தான் எனவும், ஜமீனின் வாடிபுரம் காளையான காரி அவனை இந்த மைதானத்தில் குத்தி சாய்க்க, அவன் இறந்ததை பற்றியும் அவர் விவரிக்கிறார். அந்த வீரனின் பெயர் அம்புலித்தேவன் (அப்பா ரோலிலும் சூர்யாவாக இருக்கக்கூடும்) எனவும், நான் அவரின் மகன், அப்பொழுது சிறுவனாக மைதானத்தில் தான் இருந்தேன் என பிச்சு சொல்கிறான்.
ஆக தன் பகையை தீர்க்கவே இங்கு வந்துள்ளான் பிச்சி. போட்டிகள் துவங்கிய பின் இந்த மாமன் – மச்சான் ஜோடி சில காளைகளை அசத்தலாக தழுவுகின்றனர். அந்த அரங்களில் பலரின் கவனத்தை பெறுகின்றனர். அங்கு ஊர்க்காரன் ஒருவன் இவர்களை சீண்டுகிறான்.
இறுதியில் காரி காளை அரங்கினுள் நுழைய, மச்சானை ஒதுங்க சொல்லிவிட்டு ஆயுத்தம் ஆகிறான் பிச்சி. இந்த இருவருக்கும் நடக்கும் போராட்டத்தை சில பல பக்கங்களில் வர்ணனையாக சொல்லியிருப்பார் செல்லப்பா. இறுதியில் பிச்சி தன் அப்பாவின் ஆசையை நிறைவேற்றுகிறான். இதனுடன் நாவலை முடிக்காமல், மனிதன் எப்பேற்பட்ட கொடிய மிருகம் என்பதனை ஜமீனின் செயல் நமக்கு இறுதியில் புரிய வைக்கின்றது. காரியை நினைத்து வருந்த செய்கிறது.
மனிதனுக்குள் உள்ள மிருகத்தனத்தையும், தான் எதற்காக வாடிவாசல் திறக்கப்பட்டு ஓடுகின்றோம் என அறியாத மாடுகளை பற்றியும் இந்த நாவலில் நாம் படிக்க முடியும்.சேவல் சண்டையை ஆடுகளம் படத்திலும், மனிதர்களின் பழி வாங்கும் எண்ணத்தை அசுரன் படத்திலும் சொல்லிய வெற்றிமாறனால்; கட்டாயம் இந்த வாடிவாசலை திரைப்படமாக தத்ரூபமாக எடுத்து வெற்றியையும், தேசிய விருதையும் ஒரு சேர பெற முடியும்.