நம் உடலில் உருவாகும் நோய்கள் அனைத்துமே வாத பித்த கப நோய்களை வைத்தே பிரிக்கப் படுகின்றன. நம் உடலில் காற்று, வெப்பம், நீர் இவை மூன்றும் தாம் இருக்க வேண்டிய அளவில் குறைவுபட்டாலும், அதிகமானாலும் எது அதிகரித்ததோ அல்லது குறைந்ததோ அதற்கு தகுந்தாற்போல் நோய் தோன்ற காரணமாக அமையும். இவைகள் வாத, பித்த, கப நோய்கள் என பிரிக்கப்படும்.

சித்த மருத்துவ அடிப்படையில் ஒருவரின் உடல் நலத்தில் வாதம், பித்தம்,கபம் ஆகிய மூன்றும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. வாதம், பித்தம் மற்றும் கபம் ஆகியவற்றை நம் உடலில் மிகாமலும், குறையாமலும் சீராக வைத்திருக்க உதவுவது உணவுகள் மட்டுமே ஆகும்.

இந்த நிலையில் வாதம், பித்தம், கபத்தின் மிகுதி மற்றும் குறை குணங்களைச் சீர்படுத்தும் உணவுகள் குறித்துத் தெரிந்து கொள்வது நமது உடல் நலன் காக்க உதவும்.

வாத நோய்கள்:

வாதத்தில் முக்கியமாக சொல்லப்படுவது 80 நோய்கள் ஆகும். நரம்பு வலி, வாயு, இரத்த அழுத்தம், காக்கா வலிப்பு, பக்கவாதம், இதய நோய் முதலியவை இதில் அடங்கும்.

இந்த நோய் இப்போது பரவலாக அனைத்து இடத்திலும் உள்ளது. கடலும் கடல் சார்ந்த இடமுமாகிய நெய்தல் நிலத்தில் பெரும்பாலும் வாதம் தொடர்பான நோய்கள் வர  வாய்ப்பு உள்ளது

கப நோய்கள்:

கப நோய்கள்  96 வகையான நோய்கள் உள்ளன. அவற்றில் மூக்கடைப்பு, தடிமன், இருமல், மூக்கில் நீர்வடிதல், ஆஸ்துமா, சைனஸ் போன்றவை அடங்கும். இன்றும் இந்த முறை  நடைமுறையில் உள்ளது.

பித்த நோய்கள்:

பித்தத்தில் முக்கியமாக 40 நோய்கள் சொல்லப்பட்டு உள்ளது. செரியாமை, வயிற்றுவலி, இரத்தச் சோகை, இரத்த வாந்தி, வயிற்றுப்புண், மஞ்சள் காமாலை, கல்லீரல் மற்றும் பித்தப்பை ஆகியன கெட்டுப் போதல் போன்ற நோய்கள் இதில் அடங்கும். வயலும் வயல் சார்ந்த இடமுமாகிய மருத நிலத்தில் பெரும்பாலும் பித்தம் தொடர்பான  நோய்கள் அதிகம் வர வாய்ப்பு உள்ளது.