கன்னியாகுமரி மாவட்டத்தின் பள்ளியாடி கிராமத்தை சேர்ந்த ஜெயக்குமாரும், விஜயகுமாரும் சகோதரர்கள். இருவருக்கும் சிறுவயதில் இருந்தே நரம்பு பிரச்னை ஏற்பட்டு நடக்க முடியாமல் தவித்து வருகின்றனர். சகோதர்கள் இருவருமே இதனால் படுக்கையிலேயே இருக்கிறார்கள். இந்நிலையில் இவர்களில் மூத்தவரான ஜெயக்குமாருக்கு அண்மையில் திருமணம் நடந்தது.
இந்த திருமணத்திற்கு திருநெல்வேலி மாவட்டம், பருத்திக்காடு கிராமத்தைச் சேர்ந்த சிவகுலதேவியும் வந்திருந்தார். அப்போதுதான் அவர் படுத்த படுக்கையாகவே இருக்கும் விஜயகுமாரைப் பார்த்தார் .
இயல்பிலேயே இப்படி ஒருவருக்கு வாழ்க்கைத்துணையாகி சேவை செய்ய வேண்டும் என நினைத்திருந்த சிவகுலதேவி, விஜயகுமாரைப் பார்த்ததும் காதல் வயப்பட்டார். விஜயகுமாருக்கும் காதல் மலர்ந்தது. தொடர்ந்து இருவீட்டார் சம்மதத்துடன் 24 ஆண்டுகளாக படுக்கையில் இருந்துவரும் விஜயகுமாரை திருமணம் செய்தார் சிவகுலதேவி.
விஜயகுமார் படுக்கையில் படுத்துக் கொண்டே தாலிகட்டினார். அவர் மணமகனுக்கான பட்டுவேட்டி, பட்டி சட்டையோடு படுக்கையில் இருந்தே தாலி கட்டியதைப் பார்த்து உறவினர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர். காதல் எத்தனை அழகானது…மனதை மட்டுமே பார்க்கும் ஆற்றல் கொண்டது என புரிந்து கொண்டீர்களா நண்பர்களே?